2019 டிசம்பரில் சீனாவில் வவ்வாலிடமிருந்து மனிதனுக்குத் தொற்றிய கொரானா -கோவிட் 19 கிருமி 2020 ஜனவரி கடைசியில் இந்தியாவிலும் கால் பதித்தது கண்டறியப்பட்டது. அப்போதே உடனடியாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்திறங்கிய அனைத்துப் பயணிகளையும் பரிசோதிக்கத் தொடங்கியிருந்தால் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் மாபெரும் வெற்றியைக் கண்டிருக்கலாம்.
பிப்ரவரி முழுவதும் அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் வாரம் முடிய நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான அரசு விழாக்கள், திருவிழாக்கள், மாநாடுகள் என இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவதற்கு உரிய அனுமதி வழங்கி விட்டு இப்போது அவற்றைக் காரணப்படுத்துவது மத்திய -மாநில அரசுகளின் தக்க நேரத்துச் செயல்படாத பலவீனத்தையே பறைசாற்றும்.
பயண வாயிலாகப் பரவல் என்பது நின்று சமூகப் பரவலாகத் தொற்றுக் கிருமி பாய முனையும் இவ்வேளையில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஒவ்வோர் ஊராக, ஒவ்வொரு பகுதியாக அனைத்து இடங்களிலும் அனைத்து இல்லங்களிலும் போர்க் கால அடிப்படையில் புள்ளிவிவரம் எடுத்துக் கிருமித் தொற்றுப் பரவியிருக்கிறதா எனக் கண்டறிந்து உரியன ஆற்ற வேண்டிய அவசர அவசியக் காலக் கட்டமிதுவாகும்.
அன்பு கூர்ந்து அரசு ஆவன செய்துதவப் பணிவன்போடு விழைகிறோம்.
- பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !