உலகில் தாய்ப் பாசத்தின் சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என சொல்லிக் கேட்டிருப்போம். அவ்வப்போது இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், அதை உண்மை என நிரூபிக்கும்.
அப்படித் தான் தெலங்கானாவில் ஒரு தாயின் பாசம், லாக்-டவுண் காலகட்டத்தில் அவரது மகனை வீட்டுக்கு அழைத்து வர தனது ஸ்கூட்டரில் 1,400 கிலோ மீட்டர் பயணம்செய்ய வைத்திருக்கிறது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரைச் சேர்ந்தவர் ரெஜியா பேகம். 48 வயதான இவர், 15 வருடங்களுக்கு முன்னரே கணவரை இழந்து, தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இவரது மூத்த மகன் பொறியியல் பட்டதாரி. இரண்டாவது மகன், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிவருகிறார். தனது இரு மகன்களையும் நல்லநிலைக்குக் கொண்டுவந்திருக்கும் ரஜியா பேகம், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்.
19 வயதான தனது இரண்டாவது மகன் நிஜாமுதீன், கடந்த மாதம் 12 -ம் தேதி அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்னும் ஊருக்கு தனது நண்பனை விடுவதற்காகச் சென்றிருக்கிறார் - அவரின் நண்பரின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக வந்த தகவலால்.
இந்த நிலையில்தான், நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் நிஜாமுதீன் நெல்லூரில் சிக்கிக்கொண்டார். நடுவில், அவர் சொந்த ஊர் திரும்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் ரஜியா பேகம், தானே சென்று தனது மகனை அழைத்துவருவது என முடிவுசெய்தார். மூத்த மகனை முதலில் அனுப்பலாம் என அவர் நினைத்தார். எனினும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு பயந்து, தானே செல்லும் முடிவை எடுத்தார்.
ரஜியா பேகம், காவல்துறை துணை ஆணையரிடம் சென்று தனது மகனின் நிலையை எடுத்துச்சொல்லி அனுமதிக் கடிததைப் பெற்று, கடந்த திங்கள்கிழமை காலையில் பயணத்தைத் தனது ஸ்கூட்டரில் தொடங்கினார். பகல் இரவு என தொடர்ச்சியாக ஸ்கூட்டரில் பயணம்செய்த அவர், மறுநாள் மகன் இருக்கும் நெல்லூரை அடைந்தார். தனது பணி பாதிதான் முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்த பேகம், ஓய்வின்றி உடனடியாக மகனை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினார்.
புதன்கிழமை மாலை வீடு வந்து சேர்ந்துள்ளார் பேகம். கிட்டத்தட்ட 1,400 கிலோ மீட்டர். மூன்று நாளில், அதுவும் ஸ்கூட்டரில் தனது மகனுக்காகப் பயணம்செய்த தாய் பேகத்துக்கு பாராட்டுகள் குவிந்தது. இது தொடர்பாக பி.டி.ஐ ஊடகத்துக்கு பேசிய பேகம்,``ஒரு பெண்ணுக்கு, அதுவும் சின்ன இருசக்கர வாகனத்தில் பயணம் என்பது கடினமானதுதான்.
ஆனால், என் மகனை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்ற மன உறுதி, இதைச் செய்யவைத்தது. வழியில் உணவு கிடைக்காது என்பதால், ரொட்டிகளைத் தயாரித்து கையில் எடுத்துச்சென்றேன். பசிக்கும்போது, வண்டியை நிறுத்தி சாப்பிடுவேன். தாமதிக்காமல் பயணத்தைத் தொடர்வேன். இரவில் பயணம் செய்ய அச்சமாகத்தான் இருந்தது. அதுவும், வாகனமோ மக்கள் நடமாட்டமோ இல்லாத காலி சாலையில் பயணம் செய்யும்போது பயம் இருக்கத்தான் செய்தது” என்கிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !