கொரோனா: இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக போலீஸ்! - டெல்லி பாராட்டு!
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 8) நடந்த நிலையில், ‘இந்தியா மேலும் மிகக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்துக்கு முன்னரும் பின்னரும் உள்துறை அமைச்சக டெல்லி அதிகாரிகளின் பாராட்டுக்கு உள்ளாகியிருக்கிறது தமிழக காவல் துறை.
144 தடை உத்தரவுக்குப் பின்னால் தமிழக காவல் துறை வீதியில் நடமாடுபவர்களைத் தாக்கியது என விமர்சனங்கள் ஒருபக்கம் வந்துகொண்டிருந்தாலும், தமிழக காவல் துறை உயரதிகாரிகளின் சிறப்பான செயலாற்றலைப் பார்த்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் வியந்து போயிருக்கிறார்கள்.
டெல்லி தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது. “கொரோனா போன்ற தொற்று நோய், அதுவும் உலகளாவிய தொற்று நோய் பரவும்போது அரசு நிர்வாகத்தின் சுகாதாரத் துறை, வருவாய் துறை மட்டுமல்ல, காவல் துறையின் பங்கும் மிக முக்கியமானது. அதுவும் நோய்த் தொற்று எங்கிருந்து பரவுகிறது, யார் மூலமாகப் பரவுகிறது என்பதை காவல் துறை நுண்ணறிவுத் துறை கண்டறிந்த பிறகுதான் வருவாய் துறைக்கும் சுகாதாரத் துறைக்கும் வேலை. அந்த வகையில் தமிழக காவல் துறையின் பங்கு மிகப்பெரியது.
டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டின் மூலமாகக் கொரோனோ வைரஸ் கிருமி பரவுகிறது என்பதை இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்மெல் செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழ்நாடு போலீஸ்தான். இதன் பிறகே பிற மாநில போலீசாரும் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களைத் தேட ஆரம்பித்தார்கள்.
தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்த அனைவரையும் பலத்த முயற்சியெடுத்து, சமுதாயத் தலைவர்களை விட்டுப் பேசவைத்து பரிசோதனைக்கு அழைத்து வந்து அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். வேறு மாநிலங்களிலிருந்து தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களை அம்மாநில அரசுகள் இதுவரை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தவில்லை. அடுத்து தப்லீக் பிரிவிலேயே பெண்கள் ஜமாத் என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பெண்களையும் இப்போது சோதனைக்குக் கொண்டு வந்திருப்பதில் தமிழக போலீஸாரின் பங்கு அசாத்தியமானது. அதுபோல டெல்லியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தின் தலைமை அலுவலமகான மர்கஸுக்குள் நுழையவே டெல்லி போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். பல மணி நேரங்கள் போராடினார்கள். கடைசியில் பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் சென்ற பிறகுதான் டெல்லி போலீஸார் உள்ளே நுழைய முடிந்தது என்று தகவல்கள் வந்தன. ஆனால் தமிழ்நாடு போலீஸாரின் தகவல்கள், அறிவுரைகள், வியூகங்களின் பேரில்தான் டெல்லி தப்லீக் ஜமாத் தலைமையகத்துக்குள் டெல்லி போலீஸாரால் நுழைய முடிந்தது. அதன் பிறகுதான் அங்கே உள்ளவர்களை வெளியேற்ற முடிந்தது” என்றவர்கள் மேலும் தொடர்ந்தனர்.
“இந்த விவகாரம் மத மோதலாக உருவெடுக்காமல் பார்த்துக்கொண்ட விதத்திலும் தமிழக போலீஸின் பங்கு இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்திருக்கிறது. தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்றவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலை சில மத அடிப்படை வாதிகள் தவறாகப் பயன்படுத்தி அது சட்டம் ஒழுங்கு சமூக பிரச்சினையாக மாறிவிடக் கூடாது என்பதிலும் தமிழக போலீஸ் கவனம் செலுத்தியது. அதற்காகவே ஜகி வாசுதேவ், மாதா அமிர்தானந்த மயி, சில துறவிகள் என இந்து மத முக்கியஸ்தர்கள் மூலமாக, ‘கொரோனாவுக்கு மத சாயம் பூசுதல் கூடாது’ என்றும் வீடியோ வெளியிட வைத்தார்கள். தலைமைச் செயலாளர் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியதும் காவல் துறையின் ஆலோசனையின் பேரில்தான். இவ்வாறு தமிழக காவல் துறை கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே சேவையாற்றியிருக்கிறது” என்பதே டெல்லியின் பாராட்டாக இருக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !