நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏப்ரல் 2-ம் தேதி முதல் வீடுகளுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கும் பணி தமிழக அரசு தொடங்கியது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வீடுதோறும் சென்று ரேஷன் பொருட்களையும், நிவாரண நிதியையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தினோம். இதே கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து, வீடுகளுக்கே சென்று நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு சென்று நிவாரண நிதி மட்டும் வழங்கும் அரசு அதிகாரிகள், ரேஷன் பொருட்களை கடைகளுக்கு சென்று குறிப்பிட்ட நாளில் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். அப்படியே பொதுமக்கள் ரேஷன்கடைகளுக்கு சென்று அத்தியவாசிய பொருட்களை கேட்டால், தற்போது இருப்பு இல்லையென்றும், வேறுநாட்களில் வந்து பெற்று கொள்ளுங்கள் என மக்களை அலைகழிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அத்தியவாசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லும் மக்களிடம் வேறு சில பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்து கின்றனர். மேலும் எடை குறைவாக மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியும் பொதுமக்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய நிவாரணம் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.
ஆகவே நீதிமன்ற உத்தரவின்படி ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுக்கும் பணியை சரிவரை ஊழியர்கள் செய்கின்றார்கள் என அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !